டெல்லி கிளம்பும் முதல்வர் ஸ்டாலின்…! பிரதமரிடம் ‘சொல்லும்’ விஷயம்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
தமிழகத்தில் தற்போது தான் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஏற்பாடுகள், கலைநிகழ்ச்சிகள் என போட்டிகள் அமர்க்களமாக இருந்ததாக பல தரப்பினரும் பாராட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
இந்த ஒலிம்பியாட் தொடரை பிரதமர் மோடி தொடங்கி வைத்தது கண்டு பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். சிறப்பாக நடத்தி முடித்ததாக பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் நாளை 2 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நாளை மாலை செல்லும் வகையில் பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புதன்கிழமை காலை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளார். அதேபோன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் கன்கரையும் சந்தித்து பேச உள்ளார்.
அதன் பின்னர் அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்ததற்கும், தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தற்கு நன்றியும் கூறுகிறார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் அன்றைய தினமே அவர் சென்னை திரும்ப உள்ளார்.