காலில் விழுந்து பதவி வாங்கிட்டு இப்படி பேசலாமா…? பெரிசா எடுத்துக்க மாட்டோம்…!
சென்னை: சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கிட்டு எடப்பாடி பழனிசாமி இப்போது இப்படி பேசலாமா என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறி உள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை, திமுகவின் கூட்டுச்சதியுடன் ஓ பன்னீர்செல்வம் அரங்கேற்றிய சம்பவம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இந் நிலையில் அவரின் குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: இந்த சண்டை அவர்களுக்குள் இருக்கும் சண்டை. திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எடப்பாடி கோபம் கொள்ள வேண்டியது யார் மீதோ..?
வருமானவரி சோதனை நடக்கிறது. அந்த துறை எங்கள் கையிலா உள்ளது? எதற்கு எடுத்தாலும் முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் குற்றம் சொல்வது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாக போய்விட்டது.
பொதுக்குழுவை அவர் எப்படி நடத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் உறுப்பினர்கள் ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டார்களா?
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக பல விபத்துகளை சந்தித்து வருகிறது. இப்போது நடந்தது கூட நிலையான பிரிவு கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஒன்று கூடி விடுவார்கள். சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு ஒரு வாரத்தில் மறந்தவர். அவரின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.