ஏ.ஆர் ரஹ்மானை பிச்சை எடுக்க சொன்ன பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம்….!
சென்னை: கோடம்பாக்கம் பிளாட்பார்மில் என்னை பிச்சை எடுக்க பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் கூறியதாக இசை புயல் ஏஆர் ரஹ்மான் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை கேகே நகர் பிஎஸ்பிபி பள்ளி, மடிப்பாக்கம் ராஜகோபாலன்… இந்த இரு பெயர்களும் தான் இன்று தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறி இருக்கின்றன. பள்ளி மாணவிகளிடம் இஷ்டம் போல பேசி, அரை நிர்வாணத்துடன் ஆன்லைனில் பாடம் எடுத்தார். பாலியல் தொல்லை என வரிசையாக புகார்கள் லைன் கட்டி வர இப்போது புழலில் இருக்கிறார் ஆசிரியர் ராஜகோபாலன்.
பள்ளி நிர்வாகத்திடம் போலீஸ் விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. நிலைமை இப்போது இப்படி இருக்க… கடந்த கால பிஎஸ்பிபி பள்ளி பிளாஷ் பேக்குகளும் இணையத்தில் ரவுண்டு அடிக்க ஆரம்பித்து இருக்கின்றன.
அதில் ஒன்று தான் ஏஆர் ரஹ்மானை பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் பிச்சை எடுக்க சொன்ன விவகாரம். ஒரு வீடியோ ஒன்றில் அவர் இந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். இணையத்தில் அந்த வீடியோ எக்கு தப்பாக வைரலாகி கொண்டு இருக்கிறது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பிஎஸ்பிபி பள்ளியில் படித்தவர். குடும்பத்தின் நிலவிய கடும் பொருளாதார பிரச்னை காரணமாக பள்ளி கட்டணம் முடியாமல் இருந்த தருணம். அப்போது அவரது தாயாரை அழைத்த பள்ளி நிர்வாகம் ஏஆர் ரஹ்மானை பள்ளியில் இருந்து நீக்கியது.
பீஸ் கட்ட முடியவில்லை என்றால் பையனை கோடம்பாக்கம் பிளாட்பார்முக்கு கூட்டிட்டு போங்கள். அங்கே பிச்சை எடுங்கள், பணம் போடுவார்கள், உங்க பையனை இனிமே கூட்டிட்டு வராதீங்க என்று தமது தாயிடம் கூறியதாக அந்த வீடியோவில் இசைப்புயல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு தருணங்களில் பிஎஸ்பிபி பள்ளி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இப்போது ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதே நேரத்தில் ஏஆர் ரஹ்மானை பிச்சை எடுக்க பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் கூறியது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.