51 ஆண்டுகளாக இயங்கிய பிரபல தியேட்டர் மூடப்படுகிறதா…?
சென்னை: சென்னையில் 51 ஆண்டுகளாக இயங்கி வரும் பிரபல தேவி தியேட்டர் மூடப்படுவதாக வெளியான செய்தி சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
சென்னைவாசிகளின் பிரதான அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது தேவி தியேட்டர். சென்னை அண்ணா சாலையில் மக்களின் முக்கிய அடையாளமான இந்த தியேட்டர் மீது சென்னை மக்களுக்கு எப்போதும் ஒரு பாசம் உண்டு. பல்வேறு பிரபல நடிகர்களின் ஆஸ்தான தியேட்டர் என்றும் இந்த தியேட்டரை கூறலாம்.
அப்படிப்பட்ட பெயரும், புகழும் பெற்ற தேவி தியேட்டர் மூடப்படுவதாக திடீரென செய்தி வெளியானது. கொரோனா ஊரடங்கால் இந்த தியேட்டரை மூடப்போகிறார்கள் என்று கூறப்பட ரசிகர்கள் அதிர்ந்து போயினர்.
இந் நிலையில் உண்மை நிலவரம் என்ன என்பதை தேவி தியேட்டர் நிர்வாகம் அறிக்கை வாயிலாக கூறுகிறது. அதன் விவரம் வருமாறு: பிரபல செய்தித்தாளில் வெளியான செய்தி முழுக்க தவறானது. எங்களுடைய தேவி திரையரங்கம் 51 ஆண்டுகளாக அவ்வப்போது புதுப்புது தொழில்நுட்பங்களை உட்புகுத்திப் பல திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறது.
கடந்த ஒரு வருட காலமாக கொரோனா காரணமாக தியேட்டர் வளாகத்தையும் அதன் தொடர்புடைய பிற இடங்களையும் மருத்துவத் துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வருகிறோம். இதனை அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் வீடியோவாக வெளியிட்டு வருகிறோம்.
நிலைமை இப்படி இருக்கத் திரையரங்கை நிரந்தரமாக மூடப் போவதாகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறியதாக நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறானது. இந்த செய்தியை வெளியிட்ட நாளிதழ் உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட நாளிதழுக்குத் தேவி தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.