ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள்…! ஐகோர்ட் போட்ட ‘தடாலடி’
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகமாறு சிறப்பு நீதிமன்றம் வலியுறுத்தக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர், அமைச்சர்களை விமர்சித்ததாக மொத்தம் 18 வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்து வழக்குகளும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அவற்றில் சில வழக்குகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக கடந்த மாதம் 10ம் தேதி தமிழக அரசானது அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதற்கிடையே உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், இது போன்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமானால் அது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உயர்நீதிமன்ற ஒப்புதலை பெற வேண்டும் என்று கூறி இருந்தது.
இந் நிலையில், அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனுக்கள் மீதான தீர்ப்பு அக்டோபர் 8ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் அதுவரை வழக்குகளில் ஸ்டாலினை நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் வலியுறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.