Sunday, May 04 12:57 pm

Breaking News

Trending News :

no image

மத்திய அமைச்சர் எல். முருகன்…! எப்படி நடந்தது இந்த ‘மேஜிக்’? பரபர பின்னணி


டெல்லி: மத்திய அமைச்சர் பதவி எல் முருகனுக்கு அளிக்கப்பட்டுள்ளது, தமிழக பாஜகவை குஷியாக்கி இருக்கும் அதே தருணத்தில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்பது பற்றிய பின்னணி தகவல்களும் வெளி வர ஆரம்பித்து இருக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். அவர்களில் தமிழக பாஜக தலைவர் முருகனும் இடம்பெற்று உள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

எல் முருகனின் இந்த அசாத்திய வளர்ச்சிக்கு பின்னால் பல்வேறு கடின முயற்சியும், உழைப்பும் இருந்திருக்கிறது என்று பாஜக வட்டாரங்களே கூறுகின்றன. அவரது வளர்ச்சி, வேகம் தமிழக பாஜகவில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.  தமிழக பாஜக தலைவராக அசுர வேகத்தில் வளர்ந்து, இப்போது மத்திய அமைச்சராகி அசத்தி இருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவர். கடந்த மார்ச்சில் தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரின் பெயரை கண்டு பலரும் புருவம் உயர்த்தினர். ஆனால் அதன் பின்னர், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும், முயற்சியில் இறங்கினார்.

உயர்ஜாதி கட்சி என்ற பொய் பிம்பத்தை உடைத்தெறிய எல் முருகனுக்கு பதவி அளித்து அப்போதே ஒரு நடவடிக்கையை தேசிய தலைமை எடுத்ததாக கூறப்பட்டது. தமிழக பாஜக தலைவர் ஆனவுடன், அவர் நடத்திய வேல் யாத்திரை பரவலாக பேசப்பட்டது. அரசியலில் ஆதரவை வலுபடுத்துவதற்கான முக்கிய பிடிமானமாக இந்த பயணம் அவருக்கு அமைந்தது.

அதன் அடுத்தக்கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 4 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு பெற்று தந்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டசபையில் பாஜக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து காட்டியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவருக்கு என்று ஒரு அங்கீகாரம், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் ஒருவருக்கு உயர் பதவி அளித்தது என பல முக்கிய அம்சங்களை பாஜக இணைத்துள்ளது.

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி இல்லை, அவர்களின் ஆதரவாளர் என்பதையும், தலித்துகளை ஒருங்கிணைத்து காட்டவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் இவரது அடுத்தடுத்த செயல்பாடுகளே இந்தளவுக்கு உயர்த்திருக்கிறது என்று பாஜக வட்டாரத்தில் சந்தோஷங்களும், வாழ்த்துகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது.

Most Popular