கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டி..? மதுரையில் இருந்து நித்திக்கு பறந்த கடிதம்…!
கைலாசா: கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து ஒரு லெட்டர் பறந்து போயிருக்கிறது.
ஆள்கடத்தல், பாலியல் முறைகேடு என சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா இப்போது எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தமது வலைத்தள பக்கத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தமக்கென்று கைலாசா என்ற தீவை உருவாக்கி உள்ளேன், இந்து நாடுகளுடன் வியாபாரம் செய்ய போகிறேன் என்று கூறி அதற்காக கைலாச டாலர் என்ற நாணயத்தையும் அவர் அறிமுகம் செய்தார். தமத தீவுக்ககான பாஸ்போர்ட் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நித்தியானந்தா அறிவித்து இருந்தார்.
இந்த காமெடிகள் ஒரு பக்கம் இருக்க, மதுரையில் ஒரு ஓட்டல் அதிபர் கைலாசாவில் ஓட்டல் ஆரம்பிக்க அனுமதி தாருங்கள் என்று கடிதம் எழுதி பரபரப்பை பற்ற வைத்தார். அதன்பிறகு வேறு ஒரு நபர் துணிக்கடை வைக்க பர்மிஷன் கிடைக்குமா என்று அணுகி உள்ளார்.
இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மற்றொரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அதுதான் கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டுமாம். இப்படி ஒரு கோரிக்கையுடன் வீரமரபு வீர விளையாட்டுக் கழகம் என்னும் அமைப்பு களம் இறங்கி இருக்கிறது.
எங்கு திரும்பினாலும் கொரோனா துரத்துவதால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கைலாசாவில் அனுமதி தர வேண்டும் என்று அந்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.