உள்துறை அமைச்சர் அமித் ஷா காணவில்லை…? பரபரத்த டெல்லி போலீஸ்…!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காணவில்லை என்று டெல்லி போலீசில் காங்கிரஸ் மாணவர் அணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள்தோறும் தொற்றுகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்கிறது. தொற்றுகள் அதிகரிக்க, அதிகரிக்க தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.
கொரோனா 2ம் அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் அந்தந்த மாநில அரசுகளே கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்து உள்ளனர். தொடரும் பாதிப்புகள், உயிர்பலிகளை கண்டு மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காணவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த கூத்துக்கு காரணம் காங்கிரஸ் மாணவர் அணியினர்தான். கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இந்த புகாரை அளித்துள்ளனர். உள்துறை அமித் ஷா அமைதியாக இருப்பதால் இப்படி ஒரு புகார் அளிப்பதாக அவர்கள் கூறி உள்ளனர். காங்கிரஸ் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.