மத்திய அமைச்சரவையில் மாற்றம்…? தமிழகத்தின் முக்கிய புள்ளிக்கு அமைச்சர் பதவி..?
டெல்லி: மத்திய அமைச்சரவையில் தமிழகத்தில் இருந்து சிலருக்கு அமைச்சர்கள் வாய்ப்பு கன்பார்ம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை மறுநாள் என்று உறுதியான தகவல்கள் டெல்லியில் இருந்து வெளியாகி இருக்கின்றன. இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இப்போது உள்ள மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அனைத்து கட்ட விவாதங்களுக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் என்பது கன்பார்ம் ஆகியிருக்கிறதாம். நாளை மறுநாள் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தில் யார் உள்ளே, யார் வெளியே என்பது பற்றிய தகவல்கள் இப்போது கசிந்துள்ளன. அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் சிலர் 2, 3 துறைகளை சேர்ந்து கவனித்து வருவதால் கடுமையான பணிச்சுமையில் இருக்கின்றனர்.
குறிப்பாக மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் உள்ளிட்ட பலர் கடுமையான வேலைப்பளுவில் உள்ளதால் அவர்கள் பக்கம் உள்ள சில துறைகள் புதியவர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருப்பதால் அவர்களுக்கு கல்தா கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
கிட்டத்தட்ட 20 புதிய முகங்களுக்கு இம்முறை அமைச்சர் சீட் கன்பார்ம் என்கின்றனர். சர்பானந்தா சோனோவால், நாராயணன் ரானே, ஜோதிராதித்யா சிந்தியா,பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோருக்கு ‘டிக்’ அடிக்கப்பட்டு உள்ளதாம்.
இதில் ஒரு சிறப்பு தகவலும் டெல்லி வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது. கூட்டணி கட்சிகளில் உள்ள சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுகிறதாம். குறிப்பாக அதிமுகவில் இருவருக்கு அமைச்சரவையில் பெர்த் உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம்.
ஒருவர் மூத்த, முக்கிய பிரமுகர் தம்பிதுரை… மற்றொருவர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் என்று தகவல்கள் உலா வருகின்றன. இவர்கள் இருவருக்குமான பெர்த் உறுதியாகிவிட்டதாகவும், தமது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று விட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் ஜெயித்துவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அடுத்த ஆண்டு பாஜகவுக்கு மிக முக்கியமான ஆண்டாகும். காரணம் பஞ்சாப், உத்தரகாண்ட், பெரிதும் எதிர்பார்க்கப்படும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளன. அதை மனதில் வைத்தும், அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சில பிரதிநிதித்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இந்த முறை மத்திய அமைச்சரவை மாற்றத்தில் சற்று ஆச்சரியமான விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்றும் கடைசி நேரத்தில் சிலருக்கு லக்கி ப்ரைஸ் அடிக்கலாம் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன… எது நிஜம் என்பது அறிவிப்பின் போது தெரியவரும் என்று காதை கடிக்கின்றனர் டெல்லி முக்கிய தலைவர்கள்….!