எனக்காக போலீஸ் பண்ணிய காரியம்…! போட்டோ ரிலீஸ் செய்த ரஜினி
சென்னை: ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு தம்மை பாதுகாப்பாக அழைத்து சென்ற நுங்கம்பாக்கம் எஸ்ஐ உள்ளிட்டோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.
எதிர்பார்த்ததை விட மிக பிரம்மாண்டமாக, குதூகலத்துடன் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி போட்டி தொடரை துவக்கி வைத்தார். வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் என துவக்கி விழா பார்ப்போரை பரவசப்படுத்தியது.
விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரையுலகத்தினர் தரப்பில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் பங்கேற்றார். கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் சங்கமமாயினர்.
துவக்க விழாவில் மிகுந்த சந்தோஷமாக காணப்பட்ட ரஜினிகாந்த், வெளியிட்டு உள்ள போட்டோ ஒன்று ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு அவரை நுங்கம்பாக்கம் எஸ்ஐ தலைமையிலான காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாப்பாக அழைத்து சென்ற அவர்களை ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டி உள்ளார். அது போதாது என்று அவர்களை நேரில் அழைத்து பாராட்டி நன்றி கூறி, போட்டோவும் எடுத்துள்ளார். அவரின் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாக, ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதியாட்டம் போட்டு வருகின்றனர்.