தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்..? பரபர கருத்துக் கணிப்பு… அதிரடி தகவல்…!
சென்னை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் வெளி வந்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் என்ற அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தேர்தல் பணிகளில் கட்சிகள் வேகம் காட்டுகின்றன. ஆளும் கட்சியான அதிமுக, பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுத்து, சுறுசுறுப்பாக பணிகளில் இறங்கி உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து உள்ளது. ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
இந் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரக்க வைத்துள்ளன. ஐஏஎன்எஸ், சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
234 தொகுதிகளில் திமுக கூட்டணியானது 154 இடங்கள் முதல் 162 இடங்களை கைப்பற்றும் என்று அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 41 சதவீதம் ஓட்டுகள் இந்த அணிக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக கூட்டணி 58 தொகுதிகள் முதல் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் வாக்குகள் சதவீதம் 28.6 ஆக இருக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி 2 முதல் 6 இடங்களில் வெல்லும் என்றும், அமமுகவுக்கு 1 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யத்துக்கு 8.3 சதவீதம் வாக்குகளும், அமமுகவுக்கு 6.9 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும் என்று சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.