க/பெ ரணசிங்கம் படக்கதை என்னுடையது…! சர்ச்சையை கிளப்பிய எழுத்தாளர்
சென்னை: க/பெ ரணசிங்கம் படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் மிடறு முருகதாஸ் கூறி உள்ளார்.
இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 16ம் தேதிக்கு பிறகு திரையரங்குகளுக்கும் வர உள்ளதாக கூறப்படுகிறது.
ரணசிங்கம் கதை தமது நண்பர் சொன்ன ஒற்றை வரியில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை கதையாக்கியதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் இயக்குனர் விருமாண்டி.
ஆனால், க/பெ ரணசிங்கம் படத்தின் மூலக்கதை என்னுடையது என்று எழுத்தாளர் மிடறு முருகதாஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 2017ல் 'தவிப்பு' என்ற தலைப்பில் "கதைசொல்லி" மாத இதழிலும், 2018ல் தூக்குக் கூடை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் மிடறு முருகதாஸ். இவர் த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டக்குழு உறுப்பினரும்கூட. இது குறித்து புகார் கொடுக்கவும் தயாராகி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நான் எழுதிய தவிப்பு சிறுகதைக்கு மெறுகேற்றி க/பெ ரணசிங்கம் என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதாக நண்பர்கள் கூறினர். ஆகையால் நானும் படத்தைப் பார்த்தேன் மூலக்கதை எனது தவிப்பு தான் என்பதை அறிந்தேன். இயக்குனர் என் கதையை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கிறார்.
எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் உரிய ஆவணங்களோடு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன் என்றார். மூலக்கதை என்னுடையது என்றும் திரையில் என் பெயரையும் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தவறினால் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளேன் என்றும் கூறினார்.