39 இல்ல.. 43 தொகுதி கருத்துக்கணிப்பாம்…! ஆங்கில ஊடகத்தின் அற்புத பொய்
தமிழகத்தில் கருத்துக்கணிப்புகள் மூலம் 43 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் சர்வே வெளியிட்டு சிரிப்பு மூட்டி இருக்கிறது.
தேர்தல் நாள் நெருங்க, நெருங்க வேட்பாளர்கள் பம்பரமாக சுற்றுவதை விட, கருத்துக்கணிப்புக்காக ஆளாளுக்கு சுற்ற ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வட இந்திய பிரபல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை எடுத்துவிட்டபடியே இருக்கின்றன.
அதில் லேட்டஸ்ட் சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது டைம்ஸ் நவ். ETGயுடன் இணைந்து நடத்திய சர்வே முடிவுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் ரிசல்ட் தான் சூப்பரோ, சூப்பர். அதாவது, இருக்கும் 39 தொகுதிகள், ஆனால் வேட்பாளர்கள் 43 தொகுதிகளில் வெல்வார்களாம்.
எப்படி இருக்குது இந்த கதை..? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அடங்கிய சர்வே ரிசல்ட் இதோ;
திமுக – 21 - 22
காங் – 5- 7
அஇஅதிமுக – 1 – 3
பாஜக – 2 – 6
மற்றவை – 4 -5
கருத்துக்கணிப்பின் படி திமுக 22 தொகுதிகளில் வெல்லும். அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 21 தொகுதிகளிலும், உதய சூரியன் சின்னத்தில் நாமக்கல் தொகுதியில் களம் காணும் கொமதேகவும் வெற்றி பெறுமாம்.
சரி… இது அப்படியே இருக்கட்டும்… மற்ற கட்சிகளில் ரிசல்ட்டை பார்த்தால் சொரிந்து, சொரிந்து மண்டையில் இருக்கும் முடி கீழே விழுந்தது தான் பாக்கி. அதாவது காங்கிரஸ் 5 முதல் 7 தொகுதிகளிலும், அஇஅதிமுக 1 முதல் 3 தொகுதிகளையும் வெல்லுமாம்.
அப்போ பாஜக… இந்த கட்சி 2 முதல் 6 தொகுதிகளில் ஜெயிக்குமாம். மற்ற கட்சிகள் 4 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.
இந்த கணக்கை பார்த்தால் தலைசுத்தாத குறைதான். ஒட்டு மொத்தமாக வெற்றி பெறும் தொகுதிகளை வரிசைப்படுத்தினார் திமுக 22+ காங்7+அஇஅதிமுக3+பாஜக6+மற்றவை5 என்று வரிசைக்கிரமமாக பார்த்தால் 22+7+3+6+5 = ஆக மொத்தம் 43 தொகுதிகள். இருப்பதோ மொத்தம் 39 தொகுதிகள். ஆனால் 43 தொகுதிகளில் வெற்றியாம்.
அதிகபட்ச வெற்றி தொகுதிகளில் தான் 39க்கு பதிலாக கூட்டுத்தொகை என்ற தொகுதிகள் 43 என்று வருகிறது. சரி குறைந்தபட்ச வெற்றி தொகுதிகளை கணக்கிடுவோம்… திமுக21 + காங் 5 + அஇஅதிமுக1 + பாஜக2 + மற்றவை 4 என்று வருகிறது. அதாவது இதன் கூட்டுத் தொகை 33 என்று வருகிறது. இருக்கும் 39 தொகுதிகளில் 33 தொகுதிகளின் சர்வேயாம்.
இந்த கருத்துக்கணிப்பை கண்டு இணையவாசிகள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். 39 தொகுதிகளுக்கு பதிலாக 43 தொகுதிகளின் சர்வே ரிசல்ட்டை வெளியிட்டு உள்ளனர்… இவர்களின் அறிவுத்திறனை என்னவென்று சொல்வது? யாரோ எழுதித்தருவதை அப்படியே வெளியிடுவதா?
கருத்துக்கணிப்பு என்று பொய்யானவற்றை வெளியிடலாமா? இதில் உள்ள உண்மை என்ன? என்று சகட்டு மேனிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மக்களிடம் இப்படி உண்மைக்கு புறம்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ற பெயரில் போலியாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க முடியாது… மக்கள் யார் வேண்டும் என்பதை விட யாருக்கு ஓட்டு கிடையாது என்பதில் தெளிவாக உள்ளனர் என்றும் அடி பின்னி எடுத்துள்ளனர்.