இன்று முதல் 5 நாட்கள்… கோயில்களுக்கு போக முடியாது… தடை போட்ட தமிழக அரசு
சென்னை: இன்று முதல் 5 நாட்கள் தமிழகத்தில் கோயில்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.
அதன்படி, இன்றைய தினம் முதல் வரும் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுகளினால் பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதிலும் பழனியில் தைப்பூச திருவிழா தொடங்கி உள்ள நிலையில் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வந்தனர். ஆனால், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் தொடக்கம் முதலே கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் பாதயாத்திரை திட்டத்தை மாற்றினர்.
இன்று முதல் தடை நடைமுறைக்கு வந்துள்ளதால் நேற்று ஏராளமானோர் பழனிக்கு படையெடுத்தனர். அதனால் மலை அடிவாரம் மட்டுமின்றி பழனி முழுக்கமே பக்தர்கள் மயமாக காட்சி அளித்தது.
பழனி மட்டுமல்லாது, திருச்செந்தூரிலும நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் குவிந்தனர். வாகனங்களிலும் பக்தர்கள் படை திரண்டதால் திருச்செந்தூரும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.