BEAST…. தலைப்பு காப்பி…? அப்போ கதை…? இணையத்தில் ‘தீயாய்’ ஒரு தகவல்
நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் தலைப்பு மட்டும் தான் காப்பியா? இல்லை கதையும் காப்பியா என்று இணையத்தில் நெட்டிசன்கள் கேள்விகளால் துளைத்து எடுத்து வருகின்றனர்.
திரையுலகை பொறுத்தவரை வசூல் நடிகர்களின் படங்கள் பற்றிய அறிவிப்புகள், போஸ்டர், டிரெய்லர் என எது ரிலீசானாலும் முதலில் இணையத்தில் ஒரு விஷயம் பரபரப்பாக தேடப்படும். இது அதோட காப்பி, இந்த படத்தோட உல்டா… ஏற்கனவே பூஜை போட்டு எடுக்கப்பட்டு இப்போது ஹீரோ மட்டும் தான் மாற்றப்பட்டு உள்ளார் என்று துப்பறியும் நிபுணர்கள் ரேஞ்சுக்கு பிரிச்சு மேய்ந்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள்.
அப்படித்தான் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என்று கடந்த 24 மணி நேரமாக ரசிகர்கள் இணையத்தை உண்டு இல்லை என்று ஆக்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வரும் விவரங்களை பார்த்தால் தலைசுற்றுகிறது.
அதாவது…. பீஸ்ட் (BEAST) என்ற தலைப்பில் பதிவிட்டு பல்வேறு வெளிநாடுகளில் பல்வேறு மொழிகளில் படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. பீஸ்ட் என்றால் அதன் அர்த்தம்… மிருகம், அசுர குணம் கொண்டவன், மிருகத்தனமானவன் என்று பல பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன.
அந்த பீஸ்ட் பட தலைப்பில் வெளியான வெளிநாட்டு திரைப்படங்கள் அனைத்தும் சைக்கோ மற்றும் க்ரைம் திரில்லர் அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
அவற்றில் சில படங்களின் பெயர்களையும், அதன் கதைகள் மற்றும் போஸ்டர்களையும் வெளியிட்டு இணையவாசிகள் காலரை தூக்கிவிட்டு கொண்டு உலா வருகின்றனர். முதலில் ரசிகர்கள் 17 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது… 2004ம் ஆண்டில் வெளியான படத்தை எடுத்து பிரித்து மேய்ந்துள்ளனர்.
படத்தின் பெயர் 36 Quai des Orfèvres என்பதாகும். இது ஒரு பிரெஞ்ச் மொழி படமாகும். படத்தை இயக்கியவர் ஆலிவர் மார்ச்சல். இவர் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. 12 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பிரான்ஸ் நாட்டில் 1980ம் ஆண்டில் 2 காவல்துறை அதிகாரிகள் மிக பெரிய திருட்டு கும்பலை பிடிக்க முனையும் போது ஏற்பட்ட சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் 8 தேசிய விருதுகளை இந்த படம் அள்ளி குவித்தது. பெரும் வெற்றியை பெற்ற இந்த படம் 2019ம் ஆண்டில் the beast என்று மீண்டும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அதே 2019ம் ஆண்டில் தி பீஸ்ட் என்று பெயருடன் வேறு ஒரு மொழி படம் வெளியானது. அது ஒரு கொரிய திரைப்படம். இதை நியூ ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்தது. இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட். 2017ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் BEAST என்ற பெயரில் ஒரு படம் ரீலிசானது. அதன் இயக்குநர் மிக்கெல் பெர்சே. இதுவும் ஒரு த்ரில்லர் வகை படமே….
லேட்டஸ்ட்டாக 2020ம் ஆண்டில் இத்தாலி மொழியில் படம் ஒன்று வெளி வந்தது. அதன் பெயரும் பீஸ்ட் தான். படத்தை தயாரித்தது வார்னர் பிரதர்ஸ். இந்த படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம்.
இப்படி இணையத்தில் நோண்டி நொங்கெடுத்து… படத்தின் தலைப்பு காப்பி… அப்போ கதையும் அப்படித்தானோ என்று நெட்டிசன்ஸ் கம்பு சுத்தி வருகின்றனர். கலைகளுக்கு மொழிகள் கிடையாது… எல்லை கடந்தது.. எப்படி வந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தால் போதும் என்றும் சிலர் விமர்சனங்களுக்கும், திரையுலக அறிவுஜீவிகளுக்கும் லெக்சர் எடுத்து வருகின்றனர்.
அட போங்கப்பா… இந்த அக்கப்போர் எல்லாம் வேண்டாம்… பீஸ்ட் படம் எப்போது ரிலீஸ் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.