பேரறிவாளன் விடுதலையா…? அற்புதம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை…!
சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து உங்களது மனோநிலையில் தான் உள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தம்மிடம் கூறி இருப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு கடந்த 28ம் தேதி ஒரு மாதம் பரோல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார். அப்போது மகனின் சிகிச்சைக்காக பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்திப்பின் போது என்ன பேசினோம் என்பது குறித்து அற்புதம்மாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனது மகனுக்கு இப்போது தான் மருத்துவ சிகிச்சையே தொடங்கி இருக்கிறோம். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கிறது. அதற்காக பரோலை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. எனவே மகனுக்கு சிகிச்சை அளிக்க பரோல் அவசியம். எனது கோரிக்கை குறித்து கேட்ட முதல்வர் ஸ்டாலின், என்ன முடியுமோ நிச்சயம் அதை செய்வேன் என்று கூறி இருக்கிறார்.
உங்களின் உணர்வு என்னவோ அதே உணர்வு தான் எனக்கும் இருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார் என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.