சார்பட்டா பரம்பரை படம்..! கழுவி, கழுவி ஊத்திய முன்னாள் அமைச்சர்
சென்னை: சார்பட்ட பரம்பரை படம் திமுகவின் ஆதரவு படம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கழுவி, கழுவி ஊற்றி இருக்கிறார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1975ம் ஆண்டு பிற்பகுதியில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. அதாவது வட சென்னையில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என்ற 2 குத்துச்சண்டை குழுக்கள் இடையே ஏற்படும் பகைமை தான் படத்தின் அடிப்படை கரு.
படம் பற்றிய பல பாராட்டுக்கள் கிடைத்து வரும் வேளையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படத்தை கழுவி,கழுவி ஊற்றி இருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
1980ல் தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வகையில் குத்துச்சண்டையில் பங்கேற்கும் வகையில் முகமது அலியை சென்னைக்கு எம்ஜிஆர் அழைத்து கொண்டு வந்தார். தமது ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய் மீன் குழம்பு பரிமாறி மகிழ்ந்தார்.
குத்துச்சண்டை மீது அளவில்லாத காதல் கொண்டவர் எம்ஜிஆர். அவர் முதலமைச்சரான பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் இப்போது வந்திருக்கும் சார்பட்டா படத்தில் எம்ஜிஆரை கை கழுவி விட்டது என்று காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. என்னவோ திமுக ஆட்சியில் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டது போன்று கதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆட்சியில் இல்லாத தருணத்தில் திமுகவை விமர்சிக்கும் பா ரஞ்சித் இப்போது மழுங்கி போனது எதனால்..? திமுகவிடம் அடைக்கலம் ஆக எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதா?
வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை சார்பட்டா பரம்பரை படம் தவறாக காட்டி இருக்கிறது. பா. ரஞ்சித்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறி உள்ளார்.