பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு…! டென்ஷனில் பாஜக தலைவர்கள்..!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு வழக்கிலும் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி எஸ்.கே.யாதவ்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சிபிஐலக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட 49 பேரில் 17 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர்.
எஞ்சிய 32 பேரில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வயது முதிர்வு காரணமாக நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உமாபாரதி, கல்யாண் சிங் காணொளி மூலம் தீர்ப்பின்போது ஆஜராகின்றனர்.
அதேபோல், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் காணொளியில் ஆஜராகின்றனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதால் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.