சரியும் கொங்கு அதிமுக…! திமுகவுக்கு தாவுகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்..?
சென்னை: அதிமுகவின் கொங்கு பெல்ட்டில் இருந்து முக்கியமான முன்னாள் அமைச்சர் திமுகவுக்கு தாவ தயாராக உள்ளதாக பரபர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் அஜெண்டா. தமிழகத்தின் மற்ற மண்டலங்களை சட்டசபை தேர்தலில் திமுக தொகுதிகளை அள்ளினாலும், கொங்கில் கோலோச்ச முடியவில்லை.
எனவே கொங்கு மண்டலத்தில் கட்சியை முன்பைவிட பலப்படுத்தவும், அதிமுக முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் கொண்டு வரும் நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக வேகம் எடுத்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.
இவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தேர்தலில் சீட் வழங்காதது, அதிமுக தலைமையிடம் மோதல் என பல விஷயங்கள் கட்சி தாவலலின் பின்னணியில் இருந்தது. கடந்த வாரம் அறிவாலயத்தில் ஐக்கியமானார்.
அவருக்கு திமுக தலைமை சில முக்கிய அசைன்மெண்டுகளை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியது. அதாவது அதிருப்தியாளர்களை அடையாளம் கண்டு திமுகவில் கரைசேர்க்க வேண்டும். இப்போது அதில் முக்கிய திருப்பமாக கொங்கு மண்டல அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுகவில் இணைய தோப்பு வெங்கடாசலத்தை அணுகி இருக்கிறாராம்.
தோப்பு வெங்கடாசலம் அமைச்சராக அதிமுகவில் இருந்த போது இவரும் அவருடன் படு நெருக்கமாக இருந்தவராம். அதிமுகவில் கழற்றிவிடப்பட்ட போதும் தோப்புவுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் அந்த மாஜி.
அந்த அதிமுக முக்கிய புள்ளியுடன் ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் விரைவில் திமுகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தோப்பு வெங்கடாசலம் மூலம் திமுக தலைமைக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இணைப்பு படலம் ஆரம்பமாகும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்த தூது படலம், இணைப்பு முயற்சி ஆகியவற்றை அறிந்து கொண்ட ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அவரை சமாதானப்படுத்தவும் முயற்சித்தனராம். ஆனால் எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லாததால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று செய்திகள் வருகிறதாம்.
ஒருவேளை அந்த மாஜி அமைச்சர் திமுகவில் இணைந்தார் என்று செய்தி வந்தால்.. அது அதிமுகவுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று கூறுகின்றனர் அரசியல் அறிந்தவர்கள்…!