4 அமைச்சர்களுக்கு கல்தா…? லகானை கையில் எடுக்கும் முதல்வர்..!
சென்னை: மாவட்ட செயலாளர்கள்+அமைச்சர்களாக இருக்கும் 4 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் செக் வைக்க முடிவெடுத்திருப்பதாக அறிவாலய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
திமுகவில் இப்போது மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. திமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவி என்பது அதிகாரம்மிக்க பதவிகளில் ஒன்று. மாவட்ட செயலாளரின் சொல் தான் அந்த மாவட்ட திமுகவின் வேதவாக்கு.
ஆனால் தற்போது உள்ள மா.செக்களில் கிட்டத்தட்ட 1 டஜனுக்கும் அதிகமானவர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தலைமையிடம் போயிருக்கிறதாம். அவர்களை 3 நிலைகளில் வகைப்படுத்தி உள்ள கட்சியின் மேலிடம் இந்த பட்டியலை முதல்வரிடம் பாஸ் செய்திருக்கிறது.
இப்படி பட்டியலிடப்பட்ட 15 மா.செ.க்களில் 4 பேர் அமைச்சர்கள் என்பதுதான் கூடுதல் தகவல். இரண்டு குதிரையில் சவாரி செய்யும் அவர்களின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
அவர்களை மா.செ.க்கள் பதவியில் இருந்து கட்டம் கட்டலாமா என்று யோசனையில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் அமைச்சர்களாக அவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? புதிய மா.செ. க்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என பல வகைகளில் யோசிக்கப்பட்டு இருக்கிறதாம்.
எது எப்படி இருந்தாலும் முதல் கட்ட நடவடிக்கையாக 4 அமைச்சர்களின் மா.செ. பதவிக்கு மங்களம் பாடும் நடவடிக்கை தொடங்கிவிடும் என்றும் படிப்படியாக இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களுக்கு இது ஒரு வார்னிங்காக இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.