நரிக்குறவர்களுக்கு வாய்ஸ் தந்தவரின் பரிதாப நிலை..?
சென்னை: ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை உள்ளே விட மறுத்த விவகாரத்தில் குரலற்றவர்களின் குரலாக எதிரொலித்த விவேக் என்பவரின் நிலை பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பத்து தல படத்தை எப்படி மறக்க முடியாதோ, அதுபோன்று ரோகிணி தியேட்டரை தமிழக மக்கள் மறக்க முடியாது. டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்ற நரிக்குறவர் மக்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே விட மறுக்க எழுந்த எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவர்கள் டிக்கெட் எடுத்துள்ள போதிலும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று ஒரு இளைஞர் குரல் எழுப்பினார். அவர் குரல் நியாயவாதிகளின் குரலாக எங்கும் ஒலிக்க அந்த வீடியோ எங்கும் பரவியது.
இந்த விவகாரத்தில் முதலில் குரல் எழுப்பிய இளைஞரின் பெயர் விவேக் என்கிற விவேகானந்தன். அவரின் நிலை பற்றிய தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் தாறுமாறாக வலம் வருகிறது.
விவேக் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்தவர். இதே அறச்சீற்றத்துடன், தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியில் போடப்பட்ட பழமைவாதம் நிறைந்த Code of conduct ஐ எதிர்த்து குரல் எழுப்பினார்.
நிர்வாகம் மிக மோசமான முறையில் இவரை கையாண்டது. நியாயத்திற்காக போராடிய அவருக்கு தண்டனை வழங்கியது. இந்த செமஸ்டர் முழுவதும் விவேக்கை இடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. MCC கல்லூரியில் தற்போதுவரை அவர் இடை நீக்கத்தில்தான் உள்ளார்.
சமூகத்தை நல்வழியில் இட்டுச்செல்ல அறச்சீற்றம் என்பது மிக அவசியம். அத்தகைய குணம் கொண்ட விவேக்கின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பது அவசியமும் கூட. நடப்பு பொது சமூகம் அவரின் கல்வி உரிமையை பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டும் என்று கருத்துகள் எழுந்துள்ளன.