தீவிரமடையும் டவ் தே புயல்…! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!
திருவனந்தபுரம்: டவ் தே புயல் காரணமாக கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள புயலால் கேரளாவில் மழை கொட்டோ, கொட்டு என்று கொட்டி வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி இருக்கும் இந்த புயலால் கேரளா, கர்நாடகா, தமிழகம்,மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் கேரளாவில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் கொச்சி, கொல்லம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. பல மாவட்டங்களில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.