ஓபிஎஸ் மகனை பற்றி வாய் திறந்த ஈபிஎஸ்…! ஏக குஷியில் ஆதரவாளர்கள்
சென்னை: மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கவே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் சிலர் கட்சியை தம் வசம் கொண்டு செல்ல நினைக்கின்றனர். அதனால் தான் பிரச்னை எழுகிறது.
2017ம் ஆண்டு அணிகள் இணைந்த போது கட்சியின் விதிகளில் திருத்தம் செய்ய ஓ பன்னீர்செல்வம் நெருக்கடி தந்தார். அதிமுகவின் சட்டவிதிகளை மாற்ற பொதுக்குழுவுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகிவிட்டது. இதுதான் வரலாறு. அதன்படி தான் கட்சி நடந்து வருகிறது. ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஒற்றை தலைமை வேண்டும் என்ற தொண்டர்கள் விருப்பத்தை தான் பொதுக்குழு பிரதிபலித்தது. அதிமுகவில் செயற்குழுவுக்கு எந்த அதிகாரம் இல்லை. யார் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்றும் யாரும் குறிப்பிடவில்லை.
பொதுக்குழுவுக்கு எதிரான அனுமதியை ரத்து செய்ய காவல்துறைக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். இது எந்த விதத்தில் சரி. ஓபிஎஸ்சுக்கு தமது மகன் மந்திரியாக வேண்டும். இணைந்து செயல்படலாம் என்று அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார். அவர் தர்மயுத்தம் நடத்தியவர் ஆயிற்றே?
அனைவரும் இணைய வேண்டும் என்று கூறும் ஓபிஎஸ் யாரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். எதற்காக அவர் நீதிமன்றம் போய் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும்போது எப்படி இணைய முடியும்? என்று கூறினார்.