நடுராத்திரி வரை நடந்த சம்பவம்..! அதிமுக மீது ‘கோபத்தில்' அமித் ஷா…! ஏன் தெரியுமா?
சென்னை: நள்ளிரவு வரை பேசியும் தொகுதி பங்கீடில் சுமூக முடிவு எட்டப்படாததால் அதிமுக மீது பாஜக தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. அக்கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளை தந்துவிட்டு பாஜக பக்கம் தமது பார்வையை திருப்பி இருக்கிறது அதிமுக. இந்த தொகுதி ஒதுக்கீடு சம்பந்தமாக நேற்று தமிழகம் வந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, ஒபிஎஸ் இருவருரையும் சந்தித்து பேசினார்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு 12.50 மணி வரை நீடித்தது. ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிந்துள்ளது. பாஜக தரப்பில் 33 தொகுதிகள் கேட்டதாகவும், அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஒத்து கொள்ளாமல் இருந்ததும் இழுபறிக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு, சசிகலா வருகை, அவரது நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கேட்கும் 33 தொகுதிகளை தருவதில் அதிமுக முரண்டு பிடிப்பதாக அதிருப்தியுடன் அமித் ஷா டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. 20 முதல் 22 தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என்று அதிமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் தொகுதி பங்கீடு இறுதியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.