இது நல்லாயிருக்கே.! அப்பா பிரபல நடிகர்… மகன் தூத்துக்குடி சப் கலெக்டர்…!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோலிவுட்டில் 1980, 1990களில் நடிகர் சின்னி ஜெயந்தை மறக்க முடியாது. யாரும் அவரை தமிழ் சினிமாவில் தவிர்த்திருக்கவும் முடியாது. தமது நடிப்பால், குரலால், குணச்சித்திரத்தால் ரசிகர்களை கவர்ந்தவர்.
நடிப்புடன் சின்னி ஜெயந்தின் மிமிக்ரிக்கு ஏக மவுசு இப்போதும் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர். இப்போதும் அவரது காமெடியை ரசிக்காதவர்கள் என்று யாரும் இல்லை.
சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் சின்னி ஜெயந்த் ஜட்ஜாக வந்து அசத்தி வருகிறார். இவருக்கு ஸ்ருபதன் ஜெய் என்ற மகன் உள்ளார். கடந்தாண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 75வது இடத்தை பிடித்தார்.
அவர் அனைத்து பயிற்சிகளும் முடிந்து இப்போது தூத்துக்குடி சப் கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். சின்னி ஜெயந்துக்கும், அவரது மகனுக்கும் திரையுலகத்தினர், நண்பர்கள் என வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அப்பா மிக சிறந்த காமெடி நடிகர், மகன் சப் கலெக்டர் என்பது திரையுலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த காலங்களில் பேட்டி ஒன்றில் பேசிய சின்னி ஜெயந்த், தமது மகன்களுக்கு படிப்பில் தான் ஆர்வம் இருக்கிறது, சினிமா மீது ஆசை இருந்தால் என்றோ திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து இருப்பார்கள் என்று கூறியிருந்ததை நினைவுப்படுத்தி கொள்ளலாம்.