ஆபத்து.. எடப்பாடி உயிருக்கு ஆபத்து…! டிஜிபிக்கு போன மனு
சென்னை: எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்துக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. வழக்கு கோர்ட்டில் உள்ள அதே நேரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
ஈபிஎஸ் தற்போது வரை 5 மாவட்டங்களில் தமது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். மாவட்டம் தோறும் தமது ஆதரவாளர்கள், தொண்டர்களை சந்தித்து பேசி அவர்களுக்கு தெம்பூட்டி வருகிறார். அவர் வரும் பகுதிகளில் எல்லாம் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்த வண்ணம் உள்ளனர்.
ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒரு பக்கம் சுற்றுப்பயணம் செய்து வர…ஆங்காங்கே அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கொள்வது, போஸ்டர்களை கிழித்து கொள்வது என விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந் நிலையில் ஈபிஎஸ்சுக்கு தமிழக அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் டிஜிபியிடம் புகார் மனு தரப்பட்டு உள்ளது. சேலத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் ஆன்லைனில் இப்படிப்பட்ட ஒரு மனுவை அனுப்பி இருக்கிறார்.
வரும் 15ம் தேதிக்கு பின்னர் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் போக உள்ளார். அங்கு அவரது உயிருக்கு விரோதிகள், எதிர்ப்பாளர்களினால் ஆபத்து ஏற்படலாம்.
ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் அவருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை, எனவே அவருக்கு உச்சப்பட்ச பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று மனுவில் மணிகண்டன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.