அதிரிபுதிரியாக அந்த ‘3 பேர்’…! ஈபிஎஸ்சுக்கு எதிராக மாஸ்டர் மூவ்…!
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய மூவரும் கைகோர்க்க உள்ளதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தை அதிரிபுதிரியாக்கி வருகிறது.
கட்சியில் இருந்து நீக்கம், பதவி இல்லை, ஆதரவாளர்கள் அனைவரும் டிஸ்மிஸ், அதிமுக அலுவலகம் கைவிட்டு போனது என ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் நடவடிக்கைகள் ரிவர்சில் சென்று கொண்டிருக்கிறது.
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பரஸ்பரம் தமது ஆதரவாளர்களை தொண்டர்களை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு கொண்டு இருக்கிறார்கள். இவ்விருவரின் அரசியல் கலகலப்புகளால் அடிமட்ட தொண்டர்கள் செய்வதறியாது குழம்பி போய் இருப்பது தனிக்கதை.
இப்படிப்பட்ட நிலையில், எடப்பாடிக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பிக்க… சசிகலா, டிடிவி மற்றும் ஓபிஎஸ் கொண்ட அணி உருவாகி வருவதாக ஒரு தகவல் பரபரத்து கிடக்கிறது. எடப்பாடியின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதிருப்தி ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் இந்த 3பேரும் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு ஒரு காரணத்தையும் அரசியல் திறனறிவாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். ஓபிஎஸ், அவரது மகன் உள்ளிட்டோரை நீக்கும் எடப்பாடியின் அறிவிப்பை கண்டித்துள்ள சசிகலாவின் நடவடிக்கையே இதற்கு சாம்பிள் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் மகனுக்கு அவர் அளித்துள்ள இந்த வெளிப்படையான ஆதரவானது விரைவில் இருவரும் சந்தித்து கொள்ளும் நிகழ்வாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. சசிகலா, ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு மிக விரைவில் நடக்கலாம் என்றும், இந்த சந்திப்பின் போது டிடிவி தினகரனும் இருப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
3 பேரும் ஒன்றிணைந்தால் அவர்களின் ஆதரவாளர்கள், எடப்பாடி எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்வார்கள் என்றும் இப்படி ஒரு குழுவாக இணைந்தால் சிறப்பு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.
அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலம் என்பதையும் சுட்டிக்காட்டும் அரசியல் பிரமுகர்கள், வெகு விரைவில் இப்படிப்பட்ட ஒரு சந்திப்பு நடக்க வேண்டும் என்று அதிமுகவினர் ஆர்வமுடன் இருக்கின்றனர் என்றும் கூறி உள்ளனர்.