ஆதார் அட்டையில் விநாயகர் பெயர்…? மக்களுக்கு வந்த சந்தேகம்
விநாயகருக்கே ஆதார் அட்டை வழங்கப்பட்டு விட்டதா என்று மக்கள் பேசும் அளவுக்கு வட இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடந்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. வீடுகள், கோயில்கள், பொதுஇடங்களில் விநாயகர் வழிபாடு என்று மக்களும், பக்தர்களும் கொண்டாட்டத்தின் எல்லையில் இருந்தனர்.
வழக்கத்தை விட இந்தாண்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன. பெரிய விநாயகர் முதல் சிறிய விநாயகர், பிறகு திரை நட்சத்திரங்களின் சாயல்களில் விநாயகர், ஜெயிலர் விநாயகர் என பல சிலைகள் தயாரிக்கப்பட்டன.
எப்படிப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரித்தாலும் நாங்கள் செய்தது போல் யாரும் செய்திருக்கிறீர்களா? என்று ஆச்சரியம் காட்டி இருக்கின்றனர் ஜாம்ஷெட்பூர் விநாயகர் பக்தர்கள்.
அங்கு விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் ஒரு பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருக்கின்றனர். ஆதார் அட்டையில் இடம்பெற்று இருக்கும் விஷயங்கள் தான் சூப்பர்ரகம்.
விநாயகர் தந்தை பெயர், அவரது முகவரி, பிறந்த நாள், பின்கோடு உள்ளிட்ட தகவல்களுடன் ஆதார் அட்டை மாதிரி ஒன்றை தயாரித்து அசத்தி இருக்கின்றனர். வழிநெடுகிலும் இந்த விநாயகர் ஆதார் அட்டை கட் அவுட்டை நின்று பார்க்காதவர்களே இல்லை. விநாயகருக்கே ஆதார் அட்டை தந்துவிட்டதை போல இருக்கிறதே என்று மக்கள் கூறுவதையும் பார்க்க முடிகிறது.