பரோட்டாவால் நள்ளிரவில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்…! கதறும் குடும்பம்
சென்னை: சென்னையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரோட்டா என்னும் உணவை விரும்பாதவர்கள் நம்மில் குறைவு. அதை சாப்பிட்டால் உடல்நலம் பாதிப்பு என்று மருத்துவத்துறை தரப்பில் கூறப்பட்டு வந்தாலும் அதன் மவுசு இன்னமும் குறையவில்லை. கடைகளில் பரோட்டாவுக்கு காத்திருக்கும் கூட்டத்தை தினமும் நாம் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.
இந் நிலையில் சென்னையில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வியாசர்பாடியை சேர்ந்த 27 வயது இளைஞர் கார்த்திக் நேற்றிரவு குடும்பத்தினரும் கடை ஒன்றில் பரோட்டா வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
இரவு உணவு முடிந்து அனைவரும் உறங்கி கொண்டிருந்த தருணத்தில் திடீரென கார்த்திக் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக அங்குள்ளோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பரோட்டா சாப்பிட்ட காரணத்தால் தான் கார்த்திக் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே என்ன நிலவரம் என்பது தெரிய வரும் என கூறி உள்ளனர்.