அதிமுகவில் அந்த 11 பேர்…! எந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தெரியுமா?
சென்னை: அதிமுக வழிகாட்டும் குழுவில் இபிஎஸ், ஓபிஎஸ் என 2 தரப்பிலும் இருந்து ஒட்டு மொத்தமாக 11 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக நிலவி வந்தது. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று இன்று அறிவிக்கப்பட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் முதல்வர் வேட்பாளர் பெயரை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அறிவிக்கப்பட்டது.
அந்த குழுவில், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், சிவிசண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா மோகன், ரா. கோபால கிருஷ்ணன், கி மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த 11 பேரில் எந்த பிரதிநிதித்துவத்துக்கு அதிகம் பேர் உள்ளனர் என்று அதிமுகவினர் விவாதித்து வருகின்றனர். இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறி இருப்பதாவது:
திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் முக்குலத்தோரை சேர்ந்தவர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். சி.வி. சண்முகம் வன்னியர். ஜே.சி,டி. பிரபாகர் கிறிஸ்துவ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.
மனோஜ் பாண்டியன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பா. மோகன் நடுநாட்டு வேளாளர் பிள்ளை சமுதாயத்தைச் சேர்ந்தவர். கோபாலகிருஷ்ணன் யாதவ சமூகம்.
மீனவர் சமூகத்தின் சார்பில் ஜெயக்குமாரும், தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பில் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கமும் வழிகாட்டும் குழுவில் இடம் பிடித்துள்ளனர் என்று கூறி உள்ளனர். எப்போதும் இஸ்லாமியர்களின் காவலர்கள் என்று அழைக்கப்படும் அதிமுகவில், வழிகாட்டும் குழுவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. அதேபோன்று ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடமில்லை.