கட்கரியை கழற்றிவிட்ட பாஜக…! வானதிக்கு கங்கிராட்ஸ்
டெல்லி: பாஜகவின் உயர்மட்ட அளவில் முக்கியமான ஒன்றான ஆட்சி மன்ற குழுவில் இருந்து கட்கரி அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.
பாஜகவில் முக்கியமான தருணங்களில் உயர்மட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்க ஆட்சிமன்ற குழு எனப்படும் நாடாளுமன்ற குழு உள்ளது. அக்கட்சியின் அதிகபட்ச அதிகாரங்கள் கொண்டதாக இந்த குழு அறியப்படுகிறது.
இந்த குழு எடுக்கும் முடிவுகள் தான் மாநில தலைவர்கள், முதலமைச்சர்கள் என பல பதவிகளும் நியமனம் செய்யப்படுகிறது. எனவே இந்த குழுவில் இடம்பெற எப்போதுமே கட்சியினர் விரும்புவார்கள்.
இந் நிலையில், கட்சியின் புதிய நாடாளுமன்ற குழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. கட்சியின் தலைவர் நட்டா இந்த பட்டியலை வெளியிட்ட உள்ளார்.
அந்த பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பெயர் நீக்கப்பட்டு உள்ளது. மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயரும் இடம்பெறவில்லை.
குழுவில் பிரதமர் மோடி, நட்டா, அமித் ஷா, எடியூரப்பா, சர்பானந்தா சோனோவால், இக்பால்சிங் லால்புரா உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். எப்படியும் இந்த குழுவில் இடமுண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட உ. பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயர் இந்த பட்டியலில் இல்லை. இந்த நீக்கம் கட்சி தொண்டர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பட்னவிஸ், தேசியபொது செயலாளர் பூபேந்திர யாதவ், மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் சிஇசி எனப்படும் மத்திய தேர்தல் கமிட்டி உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.