சும்மாவா..? தமிழ்நாட்டுக்கு அணில்னா… ஜப்பானுக்கு பாம்பு…! தெரிஞ்சுக்கோங்க…!
டோக்கியோ: தமிழகத்தில் எப்படி அணில் மின்தடைக்கு காரணமாகி மக்களை பாடாய்படுத்தியதோ அப்படி தான் ஜப்பானில் பாம்பு அவஸ்தையை மக்களுக்கு தந்துள்ளது.
கரண்ட் கட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எப்போதும் பொருத்தம் இருக்கும். எப்போது எப்படி கரண்ட கட்டாகும் என்று நம்ம மக்களுக்கு தெரியாது. அதே போல எப்போது வரும் என்றும் கூற முடியாது.
தமிழகத்தில் சில மாதங்கள் முன்பு தொடர்ச்சியான மின்வெட்டு ஏற்பட்ட போது ஒரு விஷயம் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் முன் வைக்கப்பட்டது. மின்வினியோகம் நிறுத்தம், மின்தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று..!
தொடக்கத்தில் அவரது விளக்கத்தை கண்டு விமர்சித்தவர்கள் எல்லாம் பின்னர் நடந்த சம்பவங்களை அறிந்த போது அமைதியாகி போனார்கள். தமிழகத்தில் அணில் என்றால் கரண்ட் கட் என்று கூறுமளவுக்கு பேமஸாகி விட்டது இந்த விஷயம்.
இப்போது தமிழகத்துக்கு அணில் என்பது போல ஜப்பானில் பாம்பு ஒன்று பாடாய்படுத்தி இருக்கிறது. பாம்பால் ஒன்று, இரண்டல்ல… ஒட்டு மொத்தமாக 10 ஆயிரம் வீடுகளில் கரண்ட் கட்டாகி உள்ளது. அந்நாட்டின் கோரியாமா நகரில் தான் இந்த அலங்கோல சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் கோரியாமாவில் கரண்ட் கட்டாக மக்கள் என்ன இப்படி ஆகிவிட்டதே? என்று நினைத்தனர். நேரம் ஆக, ஒவ்வொரு வீடாக கரண்ட் கட்டாகி கொண்டே போக.. அவ்வளவு தான் போனை சுழற்றி அந்நாட்டு மின்துறை அதிகாரிகளை தாளித்து எடுத்துவிட்டனர்.
அதன் பிறகு தான் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியது தெரிய வந்திருக்கிறது. இப்படி எப்படி நடக்கும்? என்ன காரணம்? என்று முட்டி மோதாத குறையாக அதிகாரிகள் விசாரணையில் இறங்கிய போது தான் பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
மின் வினியோக நிலையத்தில் புகுந்த பாம்பு ஒன்றால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட அதன் எதிரொலியாக 10 ஆயிரம் வீடுகளை இருட்டில் தள்ளப்பட்டதை அதிகாரிகள் அறிந்தனர். மின்தடை இப்படியும் ஏற்படுமா? என்பது தான் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது…!