தூத்துக்குடிக்கு ரஜினி திடீர் ‘விசிட்’….! பரபர வீடியோ
நடிகர் ரஜினிகாந்த் திடீரென தூத்துக்குடிக்கு சென்ற வீடியோ பார்ப்போரை பரபரப்புக்கு ஆளாக்கி உள்ளது.
தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பேய் மழை, வெள்ளத்தை யாரும் மறக்க முடியாது. தண்ணீர் வடிந்துவிட்டாலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிலைமை இன்னமும் சீரடையவில்லை என்று தான் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழக அரசும், தன்னார்வ அமைப்புகளும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றன. திரை உலகில் வெகு சிலர் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுத்துள்ளனர். பல 100கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர் பணம் கொடுக்கவில்லை, ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாத நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தூத்துக்குடி சென்றுள்ளார். மழை, வெள்ள பாதிப்புகளை பற்றி அறியவோ அல்லது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் செய்வார் என்று எதிர்பார்த்த தருணத்தில் அவர் சினிமா ஷூட்டிங்குக்கு வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் தயாராகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார், அதன் படப்பிடிப்புக்கு தான் அவர் தூத்துக்குடி வந்துள்ளார்.
விமான நிலையில் அவர் ஸ்டைலாக நடந்து வர, காத்திருந்த தொண்டர்கள் தலைவா என்று போற்றி புகழ்ந்தனர். சிலர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்க தலைவா என்று குரலெழுப்ப, அவர்களை போலீசார் நெட்டி தள்ளுகின்றனர்.
ரஜினிகாந்தின் இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழில் ரீதியாக தான் ரஜினி வந்திருக்கிறார் என்பதை அறிந்த பலரும் இன்னும் கொஞ்சம் ‘சேர்த்து’ அவருக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர்…!
ரஜினியின் ஸ்டைல் நடையுடன் கூடிய வீடியோ இந்த செய்தியுடன் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.