கில்லியான எடப்பாடி…! ஸ்டாலின், ஓபிஎஸ்சுக்கு கிடைக்காத சான்ஸ்…!
சென்னை: அதிமுக அலுவலகத்தை எடப்பாடியிடம் ஒப்படைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டு உள்ள நிலையில் நாளை டெல்லிக்கு பறக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
பொதுக்குழு, அதிமுக அலுவலகத்தில் வன்முறை, ரணகளம், அலுவலகம் சீல், கோர்ட்டில் வழக்கு என வரிசையாக பிரச்னைகளை சந்தித்த எடப்பாடியின் கையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஒப்படைக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது. ஈபிஎஸ்சின் சாதுர்ய அரசியல் பிளஸ் அதிரடிக்கு கிடைத்த வெற்றி என்று தொண்டர்கள் குஷியில் இருக்கின்றனர்.
இந்த சூட்டோடு, சூட்டாக அவர் நாளை டெல்லிக்கு பறக்க உள்ளார். தமிழகத்தில் மத்திய பாஜக அரசின் சில முக்கிய் அறிவிப்புகளுக்கு கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார் ஈபிஎஸ். அதன் தாக்கத்தை உட்கட்சி விவகாரத்தில் ஓபிஎஸ்சுக்கு பாஜக அளித்த ஆதரவில் எல்லாம் தெரிந்துவிட்டது.
பாஜகவுடன் ராசியில்லாமல் உள்ளார் என்ற காரணமே இது என்று கூறப்பட்ட நிலையில் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஜனாதிபதிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு உள்ளிட்ட விஷயங்கள் இந்த அவரின் பயணத்தில் உள்ள முக்கிய விஷயங்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
ஜிஎஸ்டி வரி குறித்தும், தற்போதுள்ள அதிமுகவில் உள்ள நிகழ்வுகள் குறித்தும் அவர் பேச போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பேச்சோடு பேச்சாக அதிமுக , பாஜக உறவு குறித்தும் சம்பாஷனைகள் இடம்பெறும் என்றும் தெரிகிறது.
ஆனால், வேறு விதமாக சில தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் இருந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஐடி ரெய்டு விவகாரம் முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று பேச ஆரம்பித்து உள்ளனர்.
இதை எல்லாத்தையும் விட, கொரோனா பாதித்து மருத்துவ ஓய்வில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் இருவரும் தற்போது டெல்லி போக முடியாத சூழலில் உள்ளனர். ஆனால் அண்ணன் ஈபிஎஸ் டெல்லிக்கு செல்கிறார் பாருங்கள் என்று கூறி தெம்பாக நடமாடி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். பயணம் முக்கியமானதல்ல… அங்கு அடுத்தடுத்து நடக்கக்கூடிய நிகழ்வுகளே முக்கியம் என்கின்றனர் விஷயத்தை நன்கு அறிந்தவர்கள்…!