ஆரஞ்சு வருதாம்… மக்களே வீட்டிலேயே இருங்கள்….!
சென்னை; தமிழகத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவிப்பான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, நாகை, மயிலாடுதுறை, கோவை என பல பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கிறது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்து மக்களை அவதிக்குள்ளாக்கியது.
இந் நிலையில், குமரிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது.
மழை பெய்யும் தருணங்களில் மக்கள் யாரும் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. திடீரென கடல் கொந்தளிக்கலாம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.