கடைசியில் ‘அந்த’ முன்னாள் அமைச்சருக்கே கொரோனா…! அதிர்ச்சியில் அதிமுக..!
சென்னை: தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்றி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பேயாட்டம் ஆடி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோன கோரத்தாண்டவத்தால் சிக்கி தவிக்கின்றனர். மருத்துவமனைகளும், சுடுகாடுகளும் நிரம்பி வழிகின்றன.
கொரோனா தடுப்பூசி இயக்கம் ஒரு பக்கம் வேகம் எடுத்திருந்தாலும் வைரஸ் பரவல் ஓயவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்ட பலரையும் தொற்று அல்லாட வைக்கிறது.
இந் நிலையில் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அவர் தமது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் விஜயபாஸ்கர் கூறி இருப்பதாவது:
பொதுச் சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக இருங்கள் என்று தமது டுவிட்டர் பதிவில் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.