திமுகவின் கம்பி கட்டும் கதை…! டுவிட்டரில் ஷாக் தந்த பாஜக பிரமுகர்
சென்னை: மின்சார மசோதா தொடர்பாக நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கம்பி கட்டும் கதைகள் சொல்வதாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயண் திருப்பதி கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: மின்சார மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் 'கம்பி கட்டும் கதை' களையெல்லாம் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மசோதா சட்டமானால் மின்துறையில் மிக பெரிய சீர்திருத்தம் அரங்கேறும்.
மின் துறையில் நிலவும் மின் திருட்டு, ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மோசமான நிர்வாகம், தரமற்ற மின்சாரம் ஆகியவை அகற்றப்பட்டு கடும் கடனில் சிக்கி தவிக்கும் மின் பகிர்மான நிறுவனங்கள் லாபமீட்டும் பாதையில் செல்லும். மானியங்கள் ரத்தாகும், சலுகைகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதெல்லாம் கட்டுக்கதை.
தனியார் முதலீடுகள் மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள் அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி நிலவும். அதன் மூலம் சீரான சேவை மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும். சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட இதர மாற்று எரிசக்தி திட்டங்கள் வலுப்பெறும்.
லஞ்சம், ஊழல், முறைகேடுகள், மின் திருட்டு இவைகளை தடுக்கும் மின்சார மசோதாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி, ஊழல், முறைகேடுகள் ஆகியவை ஒழிக்கப்படும் நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது.
தேவைப்படும் பயனாளிகளுக்கு உரிய மானியங்களும், சலுகைகளும் கிடைக்க பெறுவதோடு, நம் மின்பகிர்மான நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் நஷ்டங்களை சரி செய்து லாபகரமாக இயங்க செய்து, கட்டணத்தை குறைத்து, லஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு வழி வகுக்கிறது இந்த மசோதா.. அதனால் தான் திமுக இதனை கடுமையாக எதிர்க்கிறது என்று கூறி உள்ளார்.