பேரு வச்சியே… சோறு வச்சியா…?
ஒரு திட்டம் தான்… ஆளாளுக்கு அதை பற்றி பேசி மக்களிடம் எது உண்மை என்று தெரியாமல் ஆக்கிவிட்டனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால் அந்த திட்டங்களில் அறிவித்துள்ளபடி நிதி ஆதாரம் ஒதுக்கப்படுகிறதா என்று தெரிய வில்லை. அந்த திட்டங்களை முன் வைத்து அரசியல் நடப்பது என்பது மட்டும் உண்மை.
அப்படி ஒரு திட்டம் பற்றிய பேச்சுகள், அரசியல் கருத்துகள் தான் தமிழகத்தில் இப்போது பெரும் விவாதமாக உருவெடுத்து உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் படி, மத்திய அரசு தான் அதிக நிதி கொடுப்பதாகவும், மாநில அரசின் பங்களிப்பு என்பது குறைவே என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்து வரும் பல நல்ல திட்டங்களை தமிழக அரசு இருட்டிப்பு செய்வதாகவும் கூறி இருந்தார். இதற்கு திமுக தரப்பில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது;
பேரு வச்சியே
சோறு வச்சியா?
என்பது போல்…
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா,
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா,
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
என இந்தியில் பெயர் வச்ச மோடி
தமிழ்நாட்டிற்கு…
வீடு கட்டுவதற்கும்,
பயிர் காப்பீட்டிற்கும்,
கிராம புற சாலைக்கும்
நிதியே கொடுப்பதில்லை! என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு உள்ளே புகுந்த பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். திமுக தரப்பு பொய் பரப்புவதாகவும், அண்ணாமலை சொல்வது தான் உண்மை என்றும் பதிவுகளை பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். பதிலுக்கு திமுகவினர் விடாமல் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இது குறித்து பேசிய வீடியோவை வெளியிட்டு அதிரடி காட்டி வருகின்றனர்.