திமுகவில் இணையும் ‘அந்த’ முக்கிய புள்ளி…? கமல் ‘ஷாக்’…
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகியான மகேந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சட்டசபை தேர்தல் முடிந்தாலும் முடிந்தது… கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் பஞ்சாயத்து ஆரம்பமானது. கட்சியில் இருந்து ஒவ்வொரு முக்கிய தூண்களும் வெளியேறினர். அதற்கு பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தவர் அந்த கட்சியின் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன்.
கமல் கட்சி ஆரம்பித்த போது முக்கிய நிர்வாகியாக வலம் வந்த அவருக்கு கோவை சிங்காநல்லூர் தொகுதி கிடைக்க போட்டியிட்டு தோற்று போனார். ஆனாலும் அவர் பெற்ற 36 ஆயிரம் வாக்குகள் அனைத்து கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
கட்சிக்குள் தேர்தல் தோல்வி பற்றி பேச்சு எழுந்த போது தலைமை மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி கட்சியில் அதிரடியாக வெளியேறி கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து பொதுச் செயலாளர்கள் என ஒவ்வொருவரும் கமலுக்கு டாட்டா பை பை சொல்லி கழன்று கொண்டனர்.
மகேந்திரனை துரோகி என்று நேரிடையாக திட்டி அறிக்கை விட்டாலும் அதை பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகிய போதே எந்த கட்சியில் இணைவார் என்று பேச்சுகள் பலமாக எழுந்தது.
பாஜகவும், திமுகவும் அதற்கான காய் நகர்த்தல்களில் படு ஜோராக ஈடுபட்டதாக கூறப்பட்டது. இப்போது அந்த ரேசில் திமுக வென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தமது ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைய உள்ளதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மகேந்திரனை திமுக வளைத்துவிட்டதாக தெரிகிறது. விரைவில் திமுகவில் ஏதேனும் ஒரு முக்கிய பொறுப்பில் உட்கார வைக்க உறுதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய பொறுப்பில் இருந்து பின்னர், விலகி அரசியலின் அடுத்த நிலைக்கு செல்ல மகேந்திரன் திமுகவில் சேர உள்ள தகவல் கமல்ஹாசனை செமத்தியாக அதிர வைத்துள்ளதாம். இன்னும் யார், யார் எல்லாம் மாற்று கட்சிகளில் இணைய உள்ளனர் என்று கட்சியில் இருக்கும் 2ம் கட்ட தலைவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனராம்….!