வந்தாச்சு… கொரோனா 3வது அலை…? அதிகரிக்கும் பாதிப்பு.. மருத்துவர்கள் ‘ஷாக்’
கொரோனா தாக்குதல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகரித்து உள்ளது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை கொரோனாவின் 2வது அலை உச்சத்தில் இருந்தது. தினசரி பாதிப்பு என்பது கிட்டத்தட்ட 4 லட்சத்தை தாண்டியது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம் என பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியது.
2வது கொரோனா அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது எங்கோ போய்விட்டது. ஆக்சிஜன் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிரை இழந்த சம்பவங்களும் பதிவாகின.
இந்த நிலையில் கொரோனா 3வது அலை செப்டம்பரில் தாக்கக்கூடும் என்றும் குழந்தைகளை அதிகளவு பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். போதிய சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தயாராகுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது போன்று காணப்பட்ட கொரோனா பாதிப்பின் தினசரி எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்தை கடந்துள்ளதால் மருத்துவ நிபுணர்கள் அலர்ட் ஆகி உள்ளனர்.
வட மாநிலங்களில் குறைந்தது போன்று தென்பட்டாலும் தென்இந்தியாவில் பாதிப்புகள் குறையவில்லை. குறிப்பாக கேரளாவில் தினசரி பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. கர்நாடகாவிலும் பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.
கொரோனாவுடன், ஜிகா வைரஸ் தாக்குதலும் கேரளாவை உலுக்கி வருகிறது. தொடரும் இதுபோன்ற அறிகுறிகளால் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
மக்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் நினைவுபடுத்த வேண்டும் என்றும் அரசு இயந்திரங்கள் தீவிர விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை இந்த 3வது அலை தாக்கக்கூடும் என்பதால் பெற்றோர்கள் கவனம் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.