அண்ணனை சந்திக்கும் தம்பி..? கண்கள் பனித்து… இதயம் இனிக்குமா…?
சேலம்: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு பணியில் களம் இறங்கி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் அண்ணன் அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகிறது. பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், இப்போது மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.
கொங்கு மண்டலத்தில் இருந்து தமது சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். கோவையில் இருந்து இன்றிரவு அவர் கிளம்பி நேராக மதுரை செல்கிறார். மதுரை என்றதும் உடன்பிறப்புகள் ஒருவருக்கு ஒருவர் உற்சாகமாகி, அஞ்சா நெஞ்சன் அண்ணனை சந்திப்பாரா என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் நிச்சயம் அண்ணன் அழகிரியை சந்திப்பார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். நாளை காலையில் தான் மதுரையில் ஆலோசனை கூட்டம் என்ற போதிலும் இன்று இரவு மதுரையில் தங்குவது அண்ணனை சந்திக்க தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தம்பி வந்தால் நிச்சயம் அஞ்சாநெஞ்சனும் சந்தித்து வாழ்த்துவார், கண்கள் பனிக்கும், இதயம் இனிக்கும் என்றும் உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர். உண்மையில் அப்படியொரு சந்திப்பு நடந்தால் அஞ்சா நெஞ்சன் ஆதரவாளர்கள் ஆனந்த கூத்தாடுவார்கள் என்பது உண்மை.