எஸ்பி வேலுமணி மீது கைது நடவடிக்கையா..? ஸ்டாலினுடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மீட்டிங்
சென்னை: எஸ்பி வேலுமணிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி, முதலமைச்சர் ஸ்டாலினுடன் நடத்தியுள்ள சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் முக்கிய புள்ளியும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பதவியில் இருந்த காலத்தில் விதிகளை மீறி ஒப்பந்த புள்ளிகள் வழங்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக இன்று சோதனை நடத்தி முடித்திருக்கின்றனர்.
சோதனை முற்று பெற்றுள்ள நிலையில் எந்நேரத்திலும் எஸ்பி வேலுமணி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அதே நேரத்தில் சோதனை நடக்க, நடக்க ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை டிஜிபி கந்தசாமி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.
எஸ்பி வேலுமணிக்கு எதிரான அதிரடி சோதனை தொடர்பாகவும், அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் அடுத்தக்கட்டமாக, கடுமையான நடவடிக்கைக்கு சிக்னல் கிடைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் அதிமுக முகாம் பெரும் பரபரப்புடன் உள்ளது.