Sunday, May 04 12:03 pm

Breaking News

Trending News :

no image

என்ன நடக்குது…? பாஜக எம்பியை பாராட்டி தள்ளிய திமுகவின் முக்கிய எம்பி…!


சென்னை: பாஜக எம்பி ராஜிவ் பிரதாப் ரூடியை, திமுக எம்பி தயாநிதி மாறன் வாயார பாராட்டி உள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்லிமெண்ட மதிப்பீட்டு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறனும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் சென்னை செல்ல விமானத்தில் பயணம் ஏற்பாடாகியிருந்தது.

அதற்காக அவர் டெல்லி விமான தளத்தில் உள்ள இன்டிகோ விமானத்தில் உட்கார்ந்திருந்தார். அந்த தருணத்தில் பாஜக எம்பி ராஜிவ் பிரதாப் ரூடியுடன் நடந்த சுவாரசிய கலந்துரையாடலை தயாநிதி மாறன் தமது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலம், தமிழ் என 2 மொழிகளிலும் அவர் பதிவிட்டு, ராஜிவ் பிரதாப் ரூடியை வாயார பாராட்டி தள்ளி உள்ளார்.

அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: "இன்று (13/07/2021) நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது “நீங்களும் இதே விமானத்தில்தான் வருகிறீர்களா?” என்று விமானி உடையிலிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை.

ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாகத் தெரிந்தது. நானும் தலையசைத்தபடி யார் அவர் என யோசித்தேன். அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முகக்கவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது. ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என்றார்.

வியப்போடு. பிறகுதான் தெரிந்தது, அவர் என்னுடைய சகாவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் ஒன்றிய வர்த்தக அமைச்சராக பணியாற்றிய போது அதே துறையின் இணையமைச்சராக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான ராஜீவ் பிரதாப் ரூடி என!

இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

அவரிடம் மகிழ்ச்சியுடன் “நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லைஎன்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி “ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானிஎன்றார்.

எனது இனிய நண்பரும் சகாவும் ஒரு விமானியாக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன். உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா!

நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததமைக்கு நன்றிகள் கோடி விமானி ராஜீவ் பிரதாப் ரூடி எம்.பி. அவர்களே!!!" என்று தயாநிதி மாறன் தெரிவித்து உள்ளார்.

Most Popular