அதிமுகவுக்கு டெல்லி பாஜக ஆர்டர்…! ஒத்துக்காதீங்க… கொதித்து எழுந்த சீனியர்ஸ்
டெல்லி: மத்திய அமைச்சர் எல் முருகனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரிடமும் பாஜக கேட்ட ஒரு விஷயம் இப்போது பெரும் புகைச்சலை உண்டு பண்ணி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சிக்குள் யாரும் எதிர்பார்க்கவில்லை… அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரின் டெல்லி பயணம். அவர்களின் பயணம் முடிந்துவிட்டாலும் அதன் பின்னணியில் கசியும் தகவல்களை சொந்த கட்சியினரே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.
இருவரும் டெல்லி சென்றனர்.. பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கின்றனர். எதற்காக இந்த சந்திப்பு என்று அவர்களே விளக்கிவிட்டாலும் அது மட்டும் இல்ல என்கிற ரீதியில் ஒரு தகவல் இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
சசிகலா ஆடியோ, திமுக ரெய்டு, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி என பல செய்திகள் கசிந்தன. ஆனால் விஷயம் அதுவல்ல என்றும் இணை அமைச்சர் எல் முருகனுக்காக மாநிலங்களவை சீட் தந்துவிடுமாறு பாஜக தலைமை அறிவுறுத்தியதாகவும் அதற்காக தான் ஓபிஎஸ், இபிஎஸ் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதில் அதிமுகவுக்கு 1 சீட் உண்டு. அந்த ஒரு சீட்டை மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு தருமாறு அதிமுகவிடம் பேசத்தான் டெல்லிக்கு அழைக்கப்பட்டனர் என்று பாஜக தரப்பில் தகவல்கள் வெளியாகின.
மாநிலங்களவை சீட் முருகனுக்கு என்ற விவரம் அதிமுக இரட்டை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளனராம். அவர்களும் டெல்லி பயணத்தில் தங்களுடன் வந்துள்ள முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்தனராம். மேலும் சென்னையில் உள்ள கட்சியின் மற்ற முன்னணி மற்றும் மூத்த பிரமுகர்களுடனும் கலந்து பேசப்பட்டதாம்.
அனைவரும் ஒரே குரலில் பாஜகவின் இந்த கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று கூறி உள்ளனராம். குறிப்பாக கேபி முனுசாமி கொதித்தே விட்டாராம். நம்ம கட்சிக்காரங்க இதை ஏத்துக்க மாட்டாங்க…. வேண்டாம் ஒத்துக்காதீங்க… ஏற்கனவே கூட்டணி வைத்துள்ளதை தொண்டர்களும், மக்களும் ஏத்துக்கல என்று கூறி உள்ளாராம்.
அதே மனோநிலை தான் எங்களுக்கும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கோடிட்டு காட்டி உள்ளனராம். பாஜக கோரிக்கையை ஏற்காவிட்டால் பொது செயலாளர் பதவி ரத்து தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக டெல்லி பாஜக தலைமை களம் இறங்குமாம்…. அது மேலும் சிக்கலை உண்டாக்கும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு கருதுகிறதாம்… விரைவில் பாஜக கோரிக்கை குறித்து சென்னையில் முக்கிய நிர்வாகிகளுடன் இருவரும் பேச உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.