அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அதிரடி…! ரெய்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை
கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அவரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் சேகரின் வீடு, ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டில் இறங்கினர். நீதிமன்ற ஆணை பெற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் களத்தில் இறங்கினர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்று தகவலறிந்து அங்கு வந்த அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் திரண்டு வந்தனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.