ஸ்டாலினை சங்கடப்படுத்திய ‘அந்த’ எம்எல்ஏ..! என்ன விஷயம் தெரியுமா…?
சென்னை: புதிய சபாநாயகரான அப்பாவுக்கு அரசு ஓதுக்கீட்டில் வீடு இன்னமும் ஒதுக்காத நிலை இருக்கிறது.
சென்னையில் கிரீன்வெய்ஸ் சாலையில் தான் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பங்களாக்கள் இருக்கின்றன. தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இங்குள்ள பங்களாக்கள் ஒதுக்கப்படும்.
தற்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. ஆகையால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் அனைவரும் பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடப்பட்டது. புதிய அமைச்சர்கள் தங்க இந்த பங்களாக்களை ஒதுக்க வேண்டும். அதுதான் அரசின் நடைமுறையும் கூட.
அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் தாங்கள் குடியிருந்த பங்களாக்களை காலி செய்துவிட்டனர். முக்கியமாக எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவருக்கு பங்களா உண்டு. எனவே அவர் அதே பங்களாவில் தான் உள்ளார். மற்ற அதிமுக மாஜி அமைச்சர்கள் பலரும் பங்களாக்களை காலி செய்துவிட்டனர்.
ஆனால் முன்னாள் சபாநாயகரான தனபால் இன்னும் தாம் குடியிருக்கும் பங்களாவை காலி செய்யாமல் இருக்கிறராம்…. அவர் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் தரப்பட்டு வெகு நாட்களாகி விட்டதாம். கோரிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும், புதிய ஆட்சி என்று வந்தவுடன் தாமாகவே முன்வந்து பங்களாவை காலி செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.
வேறு பக்கம் குடியேற வீடு பார்த்து கொண்டிருப்பதாகவும், அதனால் காலி செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தனபால் இப்போது இருக்கும் பங்களா.. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தனபால் வீடு காலி செய்யாததால் அப்பாவுக்கு இன்னமும் வீடு ஒதுக்கப்படவில்லை.
முதலில் கோரிக்கை விடப்பட்டது, பின்னர் நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால் காலம் முடிந்துவிட்டது, காலி செய்யுங்கள் என்று தனபாலிடம் நேரிடையாக சொல்ல திமுக தலைமை சங்கடப்படுவதாக கூறப்படுகிறது. மானிய கோரிக்கை பட்ஜெட் துவங்க இருக்கிறது.. ஆனால் சபாநாயகருக்கே அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது.