வேலுமணி வெளிநாடு போகமுடியுமா..? லஞ்ச ஒழிப்புத்துறை வைத்த செக்
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளிநாடு போய்விட முடியாத அளவுக்கு ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு இருக்கிறது.
எஸ்பி வேலுமணிக்கு எதிரான ரெய்டு வேட்டை இன்னமும் ஓயவில்லை என்று தான் சென்னையில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 நாள் ஆகியும் இன்னமும் ரெய்டு பரபரப்பு பற்றிய தகவல்கள் தான் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் அதிகாரமட்டத்தில் இருந்து கசியவிடப்பட்டு கொண்டு இருக்கின்றன.
ரெய்டில் கிடைத்தது என்னவோ 13 லட்சத்து சொச்சம்தான். ஆனால் கடந்த காலங்களில் எந்த சந்தர்ப்பத்தில், எந்த ரூபத்தில் பணபரிவர்த்தனை நடைபெற்றது? ஒப்பந்தங்கள் எடுத்த விவகாரம்? சொத்துகள் வாங்கிய விபரங்கள், அதற்கான பணபரிவர்த்தனை என்று ஏற்கனவே திரட்டி வைத்து ஆதாரங்களுடன் வலுவான மேலும் சில ஆதாரங்களை கையில் வைத்திருக்கிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை.
லட்டு மாதிரியான இந்த ஆவணங்கள் நிச்சயம் வேலுமணிக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே தமிழக அரசின் அதிகார மையத்துக்கு முன்பாக, வேலுமணியின் காதுக்கு போனதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கருப்பு ஆடுகளை இனம் கண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. துறை ரீதியான விசாரணை நடத்தும் பணிகளும் ஒரு பக்கம் தொடங்கி இருக்கின்றன.
இந்த தருணத்தில் வேறு சில முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலுமணியின் வங்கி லாக்கர்கள் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன.
இப்போது வேறு ஒரு முக்கிய காரியத்தை கச்சிதமாக அவர்கள் செய்திருக்கின்றனர். அதாவது எஸ்பி வேலுமணியின் பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்துள்ளனர். இதன் மூலம் அவர் வெளிநாடு எங்கும் செல்லமுடியாது. அதை தடுக்க தான் இந்த நடவடிக்கை என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை உற்று நோக்கி வரும் வேலுமணி ஆதரவாளர்கள் மிகவும் தைரியமாகவே இருக்கின்றனர். எந்த வழக்கு என்றாலும், எத்தனை வழக்குகள் என்றாலும் அதை அண்ணன் சட்டப்படி எதிர்கொள்வார் என்று நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.