தயாராகும் அடுத்த ரெய்டு…? திமுக குறி வைக்கும் 2 மாஜிக்கள்…!
சென்னை: முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டு ஒரு பக்கம் இருக்க… இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்ற தகவல் அதிமுகவை அதிர வைத்துள்ளது.
இன்று தமிழகத்தின் பரபரப்பான செய்தியாகிவிட்டது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை.
கரூரில் அவரது வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் களத்தில் இறங்கினர். கரூர், சென்னை என அதிரடி சோதனை அதிமுக முகாமை அதிர வைத்தது.
கிட்டத்தட்ட 13 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் சலசலப்புக்கும் பஞ்சமில்லை. ரெய்டின் போது சாப்பாடு எடுத்துச் சென்ற காவல் வாகனத்தை விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி கலாட்டா செய்தனர்.
சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டாலும், 25.56 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் இன்றைய ரெய்டு பற்றிய வேறு ஒரு முக்கிய தகவலும், அதிமுக மற்றும் திமுக வட்டாரங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளதாம்.
இன்றைய ரெய்டு என்பது திட்டமிட்டதில் பாதியாக தான் செயல்படுத்தப்பட்டது. அதாவது இன்று 3 முன்னாள் மாஜிக்கள் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு என்பது தான் பிளானாம். ஆனால் அதில் கடைசி கட்டத்தில் மாற்றம் நிகழ்ந்ததாக கூறுகின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
எம்ஆர் விஜயபாஸ்கருடன் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கும், மற்றொரு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கும் குறி வைக்கப்பட்டதாம். ஒரே நேரத்தில் முன்னாள் மும்மூர்த்தி அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாம்.
ஆனால், ஒரு மாஜி தான் ரெய்டில் சிக்கினார் என்று தெரிவிக்கின்றனர். தப்பிய 2 முன்னாள்களுக்கும் முன்கூட்டியே தகவல் லீக் ஆகிவிட்டதால் சோதனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் தெரியவில்லை.
இந்த விவகாரம் இத்தோடு முடியாது என்றும் அடுத்த சில நாட்களில் மேலும் பரபரப்பாகும் வண்ணம் ரெய்டு நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் என்று திமுக தரப்பில் இருந்து அழுத்தமாக கூறுகின்றனர். கடைசியில் கொரோனா பரவல் குறைய… இனி ரெய்டின் வேகம் அதிகரிக்கும் என்கின்றனர் உடன்பிறப்புகள்…!