Brother… சீன் போடற வேலையெல்லாம் வேணாம்….!
சென்னை: ஒத்த பைசா பாக்கி இல்லாம பணத்தை திருப்பி கொடுத்து விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பிழிந்து எடுத்துள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி.
பருத்திவீரன் படம் ரிலீசாகி கிடைத்த பெயரை விட, இப்போது அது தொடர்பாக இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான பிரச்னை வேறு ரகம்.
அமீரின் பக்கம் நியாயம் இருக்கவே சமுத்திரக்கனி, சசிக்குமார், டி. சிவா, பாரதி ராஜா என திரையுலகமே ஓரணியில் திரண்டது. இனி மல்லுக்கட்ட முடியாது என்று முக்கிய ஞானவேல் ராஜா, அமீரை பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை விட்டார்.
அந்த அறிக்கை யாருக்காக? எந்த கையெழுத்தும் இல்லையே என்ற கேள்விகளும் எழுந்தன. இந் நிலையில், ஞானவேல் ராஜாவின் அறிக்கைக்கு பதிலடி தந்துள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி.
சீன் போடுற வேலை எல்லாம் வேணாம்… என்று பொளந்து கட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. அவரின் அறிக்கை விவரம் இதோ;
பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க வேணாம். நீங்க செய்ய வேண்டியது: எந்த பொதுவெளியில் எகத்தாளமா உக்காந்துக்கிட்டு அருவருப்பான உடல்மொழியால சேற்ற வாரி இரைச்சீங்களோ, அதே பொதுவெளில பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும்.
நீங்க கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும். அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும்.
ஏன்னா.. கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு.
அப்புறம் ‘பருத்திவீரன்’ படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு.
பாவம்.. அவங்கல்லாம் எளிய குடும்பத்துலருந்து வந்து பாத்தவங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே...! காலம் கடந்த நீதி.. மறுக்கப்பட்ட நீதி!” என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.