பிரதமர் 2024… காங்கிரஸ் மூவ்…? வளைக்கப்பட்ட முக்கிய புள்ளி…?
டெல்லி: 2024ம் ஆண்டு லோக் சபா தேர்தல் வியூகத்துக்காக பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் வளைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது 2013ம் ஆண்டு… நாடு முழுவதும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயாராகி கொண்டு இருந்த காலம். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மோடி. அப்போது மோடி என்ற பெயருடன் வேறொரு முக்கிய பெயரும் ஊடகங்களில் வலம் வர தொடங்கியது…. அந்த பெயர் தான் பிரசாந்த் கிஷோர்.
மோடி என்ற ஒற்றை பிம்பத்தை வலுவாக கட்டமைத்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அதில் வெற்றி கண்டவர் இந்த பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி தான் நாட்டை காப்பாற்ற தகுதியான, சரியான நபர் என்று பிம்பம் மக்கள் மனதில் ஆழமாக உணர வைக்கப்பட்டது.
அன்று பிரசாந்த் கிஷோர் என்ற நபரும், அதன் பின்னர் அவரின் தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனமாக ஐபேக் பெயரும் பல்வேறு தளங்களில் உச்சரிக்கப்பட்டது. பின்னர் பாஜகவுக்கு எதிராக அரசியல் களத்தில் களமாடும் பல கட்சிகளுக்காகவும் பிகே என்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து, தம்மை ஒரு வெற்றியாளன் என்பதை அடையாளப்படுத்தி கொண்டே வந்தார்.
இந் நிலையில் 2024ம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலை எதிர்கொள்ளும் செயல்பாடுகளில் காங்கிரஸ் தொடங்கி உள்ளது. இப்போது இந்த பேச்சு கிளர்ந்து எழுவதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் பிகே என்னும் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பதுதான் அது.
இந்த பேச்சுவார்த்தை முன்னரே தொடங்கிவிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக தான் பிகேவை சரத்பவார் சந்தித்து பேசினார் என்றும் தகவல்கள் குபீர் ரகமாக கிளம்பி இருக்கின்றன. பிகேவை சரத்பவார் சந்தித்த பின்னர் மற்ற முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள நிலைமையில் காங்கிரஸ் பல மாநிலங்களில் வீழ்ந்து கிடக்கிறது. கட்சியை மறுபடியும் கட்டமைத்து, வலிமைப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. கட்சிக்குள் புதிய தலைமை, புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய தருணம் அக்கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது.
அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்ற பெரும்சுமை காங்கிரசுக்கு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் இப்போது முதல்வராக உள்ள, முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடம் நெருங்கி நட்பில் உள்ளார் பிரசாந்த் கிஷோர். எனவே அவர் வியூகம் 2024ம் ஆண்டு தேர்தலில் தமக்கு மகுடத்தை பெற்று தரும் என்று காங்கிரஸ் பலமாக நம்புகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.